மன்னீஸ்வரர் தேர்த்திருவிழா: புஷ்ப பல்லக்கில் சுவாமி உலா!
அன்னுார் : அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, சுவாமி புஷ்ப பல்லக்கில் உலா வந்தார். மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா 25ம் தேதி கிராம தேவதை வழிபாடுடன் துவங்கியது. 28ம் தேதி மாலை மன்னீஸ்வரர் பூத வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார். 29ம் தேதி மாலையில் கரகாட்டம், செண்டை மேளம், திடும் இசையுடன் சுவாமி திருவீதியுலா நிகழ்ச்சி நடந்தது. அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர் புஷ்ப பல்லக்கில் பவனி வந்தார்.விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை 10:30 மணிக்கு, வேலுார், பாலமுருகனடிமை சாமிகள் தலைமையில், சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.மாலையில் யானை வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடக்கிறது. ஜன.,1ம் தேதி காலை 7.30 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளுகிறார்.அன்று காலை 8.30 மணிக்கு பஜனை நடக்கிறது. காலை 11.00 மணிக்கு மன்னீஸ்வரர் தேரோட்டம் துவங்குகிறது. பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகள், சிரவை ஆதீனம், குமரகுருபர அடிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சாமிகள், மடாதிபதிகள் தேர் வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர். ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்து வருகின்றனர்.