திருப்பதியில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்: ஐந்து மணி நேரம் தரிசனம் ரத்து!
திருப்பதி: திருமலை, ஏழுமலையான் கோவிலில், நேற்று, காலை, கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டதால், ஐந்து மணி நேரம், தரிசனம், ரத்து செய்யப்பட்டது.
ஜன., முதல் தேதி, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை, கோவில் உட்பகுதி முழுவதையும் சுத்தப்படுத்தும், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று, திருமலையில், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதற்காக, கோவில் கருவறையில் உள்ள மூல விக்ரகம் மீது, போர்வை போர்த்தப்பட்டு, உற்சவ விக்ரகங்கள், பூஜை பொருட்கள் ஆகியவை வாசனை திரவியங்கள், மூலம் சுத்தம் செய்யப்பட்டன. இதில், தேவஸ்தான அதிகாரிகளுடன், 500 ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதற்காக, நேற்று, அஷ்டதள பாத பத்மாராதனை சேவை, ரத்து செய்யப்பட்டது. கோவில் முழுவதுமாக, சுத்தம் செய்த பின், மதியம், 12:00 மணிக்கு பக்தர்கள், ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
ரூ.3.27 கோடி: திருமலை ஏழுமலையானுக்கு, நேற்று முன்தினம், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை கணக்கிடப்பட்டது. இதில், 3.27 கோடி ரூபாய் வசூலானதாக, தேவஸ்தான பராக்காமணி அதிகாரிகள் தெரிவித்தனர்.