சபரிமலையில் மகரவிளக்கு பெருவிழா: ஏற்பாடுகள் தீவிரம்!
சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்கு நாளில் மாலையில் நடைதிறக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மகரவிளக்குக்கு முன்னோடியாக சுத்திகிரியைகள் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. சபரிமலையில் மகரவிளக்கு பெருவிழாவுக்கு இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அதற்கான ஆயத்த ஏற்பாடுகள் தொடங்கியது.
பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மகரவிளக்குக்கு முன்னோடியான சுத்திகிரியைகள் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. அன்று மாலை 6.30க்கு தீபாராதனைக்கு பின்னர் தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் பிராசாத சுத்திகிரியைகள் நடக்கும். இதில் ரக்ஷா கலசம், வாஸ்துஹோமம், வாஸ்து பலி உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது. 13ம் தேதி உச்சபூஜைக்கு முன்னோடியாக பிம்பசுத்தி கிரியைகள் நடைபெறுகிறது. இந்த பூஜைக்கு பின்னர் ஐயப்பனின் விக்ரகத்தில் கலசம் அபிஷேகம் செய்யப்படும். 14ம் தேதி மகரவிளக்கு நாளில் மாலையில் நடை திறக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. வழக்கமாக மாலை மூன்று மணிக்கு நடை திறக்கப்படும் நடை அன்று ஐந்து மணிக்குதான் திறக்கும். ஐந்து மணிக்கு திறந்தாலும் பக்தர்கள் படியேறவோ, தரிசனம் செய்யவோ அனுமதி கிடையாது. பந்தளத்தில் இருந்து வரும் திருவாபரணபவனி சன்னிதானம் வந்து, ஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்து, பொன்னம்பல மேட்டில் ஜோதி காட்சி தந்த பின்னர் மட்டுமே பக்தர்கள் படியேறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அன்று இரவு 7.30 மணிக்கு மகரசங்கரமபூஜை நடக்கிறது. இதற்காக 7.20 மணி வாக்கில் மீண்டும் பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்படும். இந்தபூஜை முடிந்த பின்னர் பக்தர்கள் மீண்டும் தரிசனத்தக்கு அனுமதிக்கப்படுவார்கள்.