உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை பிரசாதத்துக்கு போலி இணையதளம்: கேரள சைபர் கிரைம் போலீசார் முடக்கினர்!

சபரிமலை பிரசாதத்துக்கு போலி இணையதளம்: கேரள சைபர் கிரைம் போலீசார் முடக்கினர்!

சபரிமலை: சபரிமலை பிரசாதம் அனுப்புவதாக தேவசம்போர்டு அனுமதி இல்லாமல் நடத்தி வந்த இணையதளத்தை கேரள சைபர் கிரைம் போலீசார் முடக்கினர். இது தொர்டர்பாக பெங்களூரில் செயல்பட்டு வந்த நிறுவனத்தின் மே.வங்க பொறியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இணையதளங்கள் மூலம் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் சபரிமலையில் பக்தர்களின் நம்பிக்கையை காசாக்கும் வகையில் பல இணையதளங்கள் உருவாகி வருகிறது. அன்னதானத்துக்கு நன்கொடை என்ற பெயரில் செயல்பட்டு வந்த பல இணைய தளங்கள் முடக்கப்பட்டது. இந்நிலையில் onlineprasadam.com என்ற இணையதளம் பக்தர்களுக்கு பிரசாதம் அனுப்புவதாக கூறி பணம் வசூல் செய்வது பற்றி தேவசம்போர்டுக்கு தகவல் கிடைத்து. சபரிமலை நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் இது தொடர்பாக திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

இந்த இணையதளம் பெங்களூர் பழைய ஏர்போட்ரோட்டில் ஆக்ஸ்போர்டு டவரில் செயல்படுவதாக தெரிந்து டி.எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். அங்கு சபரிமலை பிரசாதம் இருந்தது. இதையும், கம்ப்யூட்டர் ஹார்டுடிஸ்க், சிடி போன்றவற்றை பறிமுதல் செய்ததனர். இதை நடத்தி வந்த மே.வங்கத்தை சேர்ந்த ஐ.டி. இஞ்னியர் கூஞ்சன்மால் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீஸ் தரப்பில் கூறியதாவது: இந்த இணைய தளத்தை நடத்தியவர்கள் சபரிமலை மட்டுமல்லாமல் பழனி, மதுரை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கோயில்களின் பிரசாதம் அனுப்பி தருவதாகவும், தரிசனம் ஏற்பாடு செய்வதாகவும் பணம் வசூல் செய்துள்ளனர். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமாக கட்டணம் நிர்ணயித்துள்ளனர். இங்கு கைப்பற்றப்பட்ட அரவணை சபரிமலையில் வாங்கப்பட்டதா? அல்லது போலியாக தயாரிக்கப்பட்டதா என்பதை கண்டு பிடிக்க தரபரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரு டின் அரவணை, ஒரு பாக்கெட் அப்பம் , விபூதி, குங்குமம் அடங்கிய ஒரு பாக்கெட்டுக்கு 501 ரூபாய் என கட்டணம் நிர்ணயித்துள்ளனர். சபரிமலையில் மூன்று நட்சத்திர தங்கும் வசதி மற்றும் தரிசனம், பிரசாதம் போன்றவற்றுக்கு 11 ஆயிரம் ரூபாய் என நிர்ணயித்துள்ளனர். சம்பந்தப்பட்ட இஞ்ஜினியரை கைது செய்யும் போது மேலும் தகவல்கள் வெளிவரும். கூஞ்சன்மாலை பிடிக்க தனிப்படை போலீசார் மேற்கு வங்கம் சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !