வரதராஜ பெருமாள் கோயிலில் 12ம் தேதி அனுஷ்டான குள உற்சவம்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், செவிலிமேடு ராமானுஜர் கோவிலுக்கு எழுந்தருளும் அனுஷ்டான குளம் உற்சவம், வரும் 12ம் தேதி நடக்கிறது. காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் ராமானுஜருக்கு தனி கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் இந்த கோவிலில் எழுந்தருள்வார். ராமானுஜர் கங்கை யாத்திரையில் இருந்து திரும்பி, காஞ்சி வரதராஜ பெருமாளை தரிசிக்க வந்தபோது செவிலிமேடு பகுதியில் தண்ணீர் தாகம் எடுத்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டமும் இல்லை. தண்ணீரும் இல்லை. இதை அறிந்த பெருமாள், தாயார் இருவரும் வேடுவ கோலத்தில் ராமானுஜருக்கு காட்சி கொடுத்து, அவர் தாகம் தீர்க்க, அப்பகுதியில் பள்ளம் தோண்டியதாக வரலாறு கூறுகிறது. இந்த குளத்தில் நீராடிவிட்டு, பெருமாளுக்கு சாலை கிணற்றிலிருந்து ராமானுஜர் தண்ணீர் எடுத்து சென்றதால், இதற்கு அனுஷ்டான குளம் என, பெயர் உண்டானது. அதன் நினைவாக, ஆண்டுதோறும் வரதராஜ பெருமாள் ராமானுஜர் கோவிலுக்கு எழுந்தருள்வதை அனுஷ்டான குள உற்சவமாக கொண்டாடப்படுகிறது. இதன்படி, வரும் 12ம் தேதி, காலை 11:00 மணியளவில், கோவிலில் இருந்து வரதராஜர் புறப்பட்டு, பகல் 12:00 மணியளவில், ராமானுஜர் சன்னி தியில் எழுந்தருள்வார். அங்கு திருமஞ்சனம் நடைபெறும்.