கோயில் காளைகளுக்கு மரியாதை செலுத்த கோரிக்கை!
திருப்புத்தூர்: திருப்புத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த முன்னேற்பாடு கூட்டத்தில் பங்கேற்ற திருப்புத்தூர் வட்டாரக் கிராமத்தினர் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோயில் காளைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தொழுவில் பொங்கலிட்டு அவிழ்த்து விட கோரிக்கை வைத்தனர்.சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி மாடு விளையாட்டுக்களுக்கு தடை அமலில் உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ.சிதம்பரம் தலைமை வகித்தார்.தாசில்தார் வேணு, டி.எஸ்.பி., முருகன் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.,அருணகிரி, நெடுமரம் முருகேசன், ஊராட்சித் தலைவர் வேணுகோபால், ஐந்துநிலை நாட்டு அம்பலம் சோலை, விவசாயிகள் சங்கத்தலைவர் சதாசிவம், ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், உள்ளிட்ட கிராமத்தினர் பலர் பங்கேற்றனர்.
கிராமத்தினர் தரப்பில், கோவில் மாடுகளுக்கு மஞ்சுவிரட்டுத் தொழுவில் பொங்கல் வைத்து மாடுகளை அவிழ்த்து விட வேண்டும், மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு நடத்த சிறப்பு அனுமதி தர கோரிக்கை வைத்தனர். அதற்கு அதிகாரிகள் தரப்பில்,சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, ரேக்ளா உள்ளிட்ட மாடு விளையாட்டுக்களுக்கு தடை அமலில் உள்ளது. எனவே நடத்த அனுமதி இல்லை. ஆனால்,பொங்கல் வைத்து காளைகளை அவிழ்த்து விடுவது தொடர்பாக கலெக்டர்,போலீஸ் எஸ்.பி. ஆலோசனைக்கு பின் முடிவு அறிவிக்கப் படும், என கூறப்பட்டது.