வன்னிய பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்!
புதுச்சேரி: வன்னிய பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முதலியார்பேட்டை, வன்னிய பெருமாள் கோவிலில், மார்கழி மாத உற்சவ திருவிழா, கடந்த 16ம் தேதி துவங்கியது. கடந்த 21ம் தேதி அனுமந்த் ஜெயந்தி விழா, 22ம் தேதி தீபத்திருவிழா, 23ம் தேதி, 1008 வடமாலை சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 1ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. ஸ்ரீநிவாச பெருமாள், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக, இரவு 7:00 மணிக்கு, சீர்வரிசையுடன் ஆண்டாள் புறப்பாடும், இரவு 8:00 மணிக்கு நிச்சயதார்த்தம், 8:30 மணிக்கு, ஆண்டாள் ஸ்ரீநிவாச பெருமாள் மாலை மாற்றும் வைபவம், 9:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், 9:30 மணிக்கு, ஆண்டாள், ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் பாஸ்கர் எம்.எல்.ஏ., மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் தனி அதிகாரி சீனுவாசன் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.