உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் காணும் பொங்கல் கொண்டாட்டம்!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் காணும் பொங்கல் கொண்டாட்டம்!

சிதம்பரம் : காணும் பொங்கல் பண்டிகையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஏராளமான பெண்கள் குவிந்தனர்.பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து நேற்று காணும் பொங்கல் விழா நடந்தது. அதனையொட்டி, ஏராளமானோர் கோவில், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு தங்கள் உறவினர்கள், நண்பர்களுடன் சென்று மகிழ்ந்தனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் காணும் பொங்கலையொட்டி நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமானவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.சிதம்பரம் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் நேற்று காலை முதல் நடராஜர் கோவிலுக்கு வந்தனர்.கோவில் வெளி பிரகாரத்தில் பெண்கள் பல குழுக்களாக பிரிந்து கும்மி அடித்து பாடி மகிழ்ந்தனர். இளம் பெண்கள் கோகோ உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடினர்.கிராமப் பகுதிகளில் இருந்து வந்தவர்கள் மதிய உணவை எடுத்து வந்து உறவினர்கள், நண்பர்களுடன் கூட்டமாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, வெளிப்பிரகாரம் பொழுது போக்கு மைதானமாக காணப்பட்டது. பொதுமக்கள் கூட்டம் கோவிலில் இரவு 9:00 மணி வரை நீடித்தது.வல்லம்படுகை, தீர்த்துக்குடி, கருப்பூர், ஜெயங்கொண்டபட்டினம், திட்டுக்காட்டூர், கீழ் குண்டலவாடி, மேல குண்டலவாடி, பெராம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் இளைஞர்கள், சிறுவர்கள் கூடி கொள்ளிடக்கரையில் கபடி, சிலம்பாட்டம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசு வழங்கினர். மேலும், கடவாச்சேரி, உசுப்பூர், அம்மாபேட்டை, கூத்தன்கோவில், வேளக்குடி, பழையநல்லூர், வையூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம பெண்கள் அப்பகுதிகளில் கோவில் திடல்களில் ஒன்று கூடி கும்மி, கோலாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாடி மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !