மண்டல மகரவிளக்கு காலம் நிறைவு: சபரிமலை நடை அடைப்பு!
சபரிமலை: 60 நாட்கள் நடைபெற்ற மண்டல மகரவிளக்கு கால பூஜைகள் நிறைவு பெற்று சபரிமலை நடை நேற்று காலை அடைக்கப்பட்டது. அடுத்து மாசி மாத பூஜைக்காக பிப்.,12ம் தேதி மாலை நடை திறக்கப்படும். சபரிமலையில் கடந்த 14ம் தேதி மகரவிளக்கு விழா நடந்தது. அதன் பின் தொடர்ந்து தினமும் மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளல் நடந்தது. 16 முதல் 19 வரை தினமும் இரவு ஏழு மணிக்கு படிபூஜை நடந்தது.
18ம் தேதி காலை 10 மணிக்கு நெய்யபிஷேகம் நிறைவு பெற்று தொடர்ந்து மதியம் களபபூஜை நடைபெற்றது. 19ம் தேதி காலை ஐந்து மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடந்தாலும், நெய்யபிஷேகம் நடக்கவில்லை. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனமும் முடிவுற்றது. பின்னர் மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதிபூஜை நடந்தது. செவ்வாடை அணிந்த பக்தர்கள் இந்த பூஜையை நடத்தினர். நேற்று காலை ஐந்து மணிக்கு நடை திறந்த பின் 6.30 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி மகயிரம் திருநாள் கேரள வர்மா ராஜா கோயிலுக்கு வந்தார். அவரது முன்னிலையில் கோயில் நடைஅடைத்து சாவியையும், பணமுடிப்பையும், மேல்சாந்தி கோயில் நிர்வாக அதிகாரியிடம் கொடுக்க, அவர் அதை மன்னர் பிரதிநிதியிடம் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்டு 18ம் படிக்கு கீழே வந்த அவர், மீண்டும் கோயில் நிர்வாக அதிகாரியிடம் சாவியை கொடுத்து, வரும் நாட்களிலும் பூஜைகளை தவறாமல் நடத்த வேண்டும் என்று கூறி திருவாபரணங்களுடன் திரும்பி சென்றார். இனி மாசி மாத பூஜைகளுக்காக பிப்.12ம் தேதி மாலை 5.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கும்.