காஞ்சி விஜயராகவ பெருமாள் தெப்போற்சவம்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த,. திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவில் தெப்போற்சவம் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று, தெப்பத்தில் பெருமாள் எழுந்தருளி மூன்று முறை சுற்றி வலம் வந்தார். காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழியில் மரகதவல்லி சமேத விஜயராகவப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் தொண்டை மண்டலத்தில் உள்ள வைணவ திருத்தலங்களில் சிறந்து விளங்கி வருகிறது. 108 திவ்ய ÷ தசங்களில் ஒன்றாக போற்றப்பட்டு வருகிறது. இக்கோவில் மூன்று நாள் தெப்போற்சவம் நேற்று இரவு 7:00 மணியளவில் துவங்கியது. நேற்று மாலை 6:45 மணியளவில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் தாயார் சன்னிதானம் மண்டபத்தில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பூஜைகள் முடிந்த பின் தெப்பத்திற்கு புறப்பட்டு சென்றார். வளாகத்தில் உள்ள உடையவர் சன்னிதியில் மரியாதை பெறப்பட்டு, குளத்தில் மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் 7:00 மணியளவில் எழுந்தருளினார். அதன் பின், ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்தர்கள் முழங்க, தெப்பத்தில் தேர் சுற்றி வந்தன. மூன்று முறை சுற்றிய பின் மீண்டும் 7:30 மணியளவில் கோவிலுக்கு சென்றடைந்தார். இன்று இரவு நடக்கும் தெப்போற்சவத்தில் ஐந்து முறை சுற்றி, தெப்பத்தை பெருமாள் வலம் வருவார்.