லட்சுமிக்கு மஞ்சள் மாலை!
பாற்கடலைக் கடைந்தபோது, ஐராவதம் என்னும் வெள்ளை யானை வெளி வந்தது. அதன் தலையில் லட்சுமி இருந்தாள். இவளையே கஜ லட்சுமி என்கிறோம். கஜம் என்றால் யானை. நான்கு கைகள் கொண்ட இவள், மேலிரு கைகளில் செந்தாமரை மலர் வைத்திருக்கிறாள். ஒரு கை அபயம் (பாதுகாப்பது), மற்றொரு கை வரத முத்திரை (வேண்டியதை அருள்வது) காட்டியும் இருக்கும். தாமரை மலர் மீது அமர்ந்திருப்பாள். இருபுறமும் யானைகள் தங்கக் குடம் ஏந்தி அதிலுள்ள புனித நீரால் அபிஷேகம் செய்து கொண்டிருக்கும். அருகில் பெண்கள் வெண்சாமரம் வீசி நிற்பர். பட்டாடை உடுத்தி கம்பீரமாக இருக்கும் கஜலட்சுமிக்கு, மாலை நேரத்தில் மஞ்சள் நிற செவ்வந்தி மாலை சூட்டி வழிபட்டால் செல்வ வளம் பெருகும் என்பர். எந்த தெய்வத்தின் சந்நிதியாக இருந்தாலும், அங்குள்ள கருவறையின் மீது கஜ லட்சுமியின் திருவுருவமே இடம் பெற வேண்டும் என கோயில் ஆகம விதிகள் குறிப்பிடுகின்றன.