உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 7வது இந்து ஆன்மிக கண்காட்சி: சென்னையில் 3ம் தேதி தொடங்குகிறது!

7வது இந்து ஆன்மிக கண்காட்சி: சென்னையில் 3ம் தேதி தொடங்குகிறது!

சென்னை: மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் இந்து ஆன்மிகம் மற்றும் சேவைக் கண்காட்சி பிப்ரவரி 3ம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து இந்து ஆன்மிக சேவை கண்காட்சி உதவி தலைவர் ஆர்.ராஜலட்சுமி, சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-  இந்து ஆன்மிகத்தில் புதைந்துள்ள வனம் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாத்தல், அனைத்து உயிரினங்களையும் பேணுதல், சுற்றுச்சூழலைப் பராமரித்தல், பெற்றோர், ஆசிரியர் மற்றும் பெரியோர்களை வணங்குதல், பெண்மையை போற்றுதல், நாட்டுப்பற்றை உணர்த்துதல் ஆகிய 6 நல்ல குணங்களை மையமாக வைத்து 7-வது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி வரும் பிப்ரவரி 3-ந்தேதி மாலை 6 மணி அளவில் மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் தொடங்குகிறது.

இந்து மதம், புத்த மதம், ஜெயின் மதம், சீக்கிய மதங்களை சேர்ந்த தலைவர்கள் விழாவை தொடங்கி வைக்கின்றனர். அதன்படி திருப்பணந்தாள் காசிமட அதிபர் முத்துகுமாரசாமி தம்பிரான் சுவாமிகள், வர்ஜ்யாயிண புத்தமதத்தைச் சேர்ந்த 12-வது குருஜி கெண்டிங் டை ஸ்தூபா, டெல்லி மானவ் மந்தீர் மிஷன் டிரஸ்டு நிறுவன தலைவர் ஆச்சார்யா ரூப்சந்திர ஜி மகராஜ், ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். சிறப்பு விருந்தினராக சென்னை குருத்வார் குருனானக் சத்சங்க சபா பொதுசெயலாளர் பல்பீர்சிங் லோட்டா கலந்து கொள்கிறார்.

6 நல்ல குணங்கள்: 9ம் தேதி வரை நடக்கும் இந்த கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு, இயற்கை வழிபாடு, பிற ஜீவராசிகளை வழிபடுவது, நதிகளை வழிபடுவது, பெற்றோர்கள், ஆசிரியர்களை தெய்வமாக போற்றுவது, பெண்களுக்கு மரியாதை செய்யும் விதத்தில் கன்னி பூஜை, நாட்டு பற்றை அதிகரிக்கும் விதத்தில் பாரதமாதாவையும், பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களையும் ஆராதனை செய்வது ஆகிய 6 நல்ல குணங்களை மையமாக வைத்து நல்ல பண்புப்பயிற்சி செயல்விளக்கம் அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். குறிப்பாக பிப்ரவரி 4-ந்தேதி 1,008 துளசி செடிகள் போற்றி வணங்கப்பட்டு, விநியோகிக்கப்படுகிறது. 5-ந்தேதி 1,008 தமிழாசிரியர்கள், ஆசிரியர்கள் கவுரவிப்பு மற்றும் 6-ந்தேதி அரசு மற்றும் மாநகராட்சிகளில் படிக்கும் 10 ஆயிரத்து 8 மாணவிகள் போற்றி வணங்கப்படுகிறார்கள். தொடர்ந்து 8-ந்தேதி பாரதமாதா மற்றும் பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 ராணுவ வீரர்களைப் போற்றி வணங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 9-ந்தேதி 1,008 மரக்கன்றுகள் பூஜை செய்யப்பட்டு நடுவதற்காக விநியோகம் செய்யப்படுகிறது.

10 ஆயிரம் மாணவர்கள்: ராமகிருஷ்ணா மிஷன், சின்மயா மிஷன், மாதா அமிர்தானந்தமயி, ஆர்ட் ஆப் லிவிங், சுவாமி நாராயண இயக்கம், பதஞ்சலி யோக பீடம், ஈஷா யோகா, சத்ய சாய் நிறுவனம், சேவா பாரதி, திருமலை திருப்பதி தேவஸ்தானம், இந்தியத் தொல்லியல் துறை மற்றும் பல புகழ்பெற்ற மற்றும் பெரிய அமைப்புகளையும் ஒன்றிணைத்து நடக்கிறது. ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் 376 போட்டிகள் 4 கட்டமாக நடத்தப்படுகிறது. இறுதி கட்ட போட்டிதேர்வு கண்காட்சியில் நடத்தப்படுகிறது.

ஸ்ரீனிவாச திருகல்யாணம்:இதுதவிர ஆந்திர மாநில கோவில் நிர்வாகத்தினரால் கண்காட்சியின் அனைத்து நாட்களும் நடத்தப்படும்  திருக்கல்யாண உற்சவங்களைத் தவிர, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிப்ரவரி 9-ந்தேதி அன்று மாலை 6 மணிக்கு, ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கண்காட்சியின் முன்னோட்டமாக சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை தாங்கிய 18 ரதங்கள் கடந்த 18-ந்தேதி முதல் கடந்த 28-ந்தேதி வரை சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு சென்று 6 பண்புகள் பற்றிய செய்திகளை பரப்பினார்கள். தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையில் இருந்து விவேகானந்தர் இல்லம் வரை காலை 8 மணிக்கு 10 ஆயிரம் மாணவர்கள் விவேகானந்தர் போன்று உடை அணிந்து நடைபயணமாக செல்கின்றனர். முன்னதாக ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார். விவேகானந்தர் இல்லத்தில் ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மகாதேவன், மாணவர்களுக்கு உறுதிமொழி ஏற்பைச் செய்து வைக்கிறார்.

இலவச அனுமதி: தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திர மாநில அரசுகளின் பங்கேற்போடும், இந்தியத் தொல்லியல்துறை மற்றும் 19 முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்வேறு தன்னார்வ அமைப்புகளோடு, தமிழக அரசின் ஆதரவுடன் கட்டணமில்லா கண்காட்சியாக நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, இந்து ஆன்மிக சேவை கண்காட்சி அமைப்பு குழு தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், உதவி தலைவர்கள் பத்மா சுப்பிரமணியம், நான் (ராஜலட்சுமி), வனிதாமோகன், பி.சுரேஷ், சர்தார்மல் சோர்டியா மற்றும் செயலாளர் பி.கணபதி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். உடன் கண்காட்சி நிர்வாகி வைத்தியசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !