மே 1ல் சிதம்பரம் நடராஜர் கோவில் கும்பாபிஷேகம்: பொது தீட்சிதர்களின் செயலர் பேட்டி!
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் கும்பாபிஷேகம் வரும் மே 1ம் தேதி நடக்கிறது. திருப்பணி கமிட்டி தேவையில்லை என பொது தீட்சிதர்களின் செயலர் பாஸ்கர தீட்சிதர் கூறினார். நேற்று மாலை நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சிதம்பரம் நடராஜர் கோவில் கும்பாபிஷேகம் வரும் மே மாதம் 1ம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி, 12 கால யாக பூஜைகள் நடத்தப்படுகிறது. யாகசாலை பூஜைகள் 23ம் தேதி துவங்கி 30ம் தேதி முடிவடைகிறது. கும்பாபிஷேக நாளான மே 1ம் தேதி, காலை 7:00 மணிக்கு மேல் 8:30 மணிக்குள், சித்சபையில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா கும்பாபிஷேகமும், நான்கு ராஜகோபுரம், ராஜ சபை என்கிற ஆயிரம் கால் மண்டபம் உள்ளிட்ட சன்னதிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி, 2ம் தேதி தேர் உற்சவமும், 3ம் தேதி ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜருக்கு மகா அபிஷேகமும், மதியம் 2:30 மணிக்கு தரிசன காட்சியும் நடக்கிறது. கும்பாபிஷேகம் முழுமையான மத ரீதியான சடங்குகளுடன் நடைபெறும் வைபவமாகும். தற்போது நடைபெற உள்ள மகா கும்பாபிஷேகத்திற்காக திருக்கோவில் எவ்வித திருப்பணியோ, கட்டடம் செப்பனிடும் பணியோ நடைபெறவில்லை. பொது தீட்சிதர்களின் தீர்மானம் அடிப்படையில், திருவுளச்சீட்டு எடுத்து கும்பாபிஷேக ஆச்சாரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆன்மிக மெய்யன்பர்கள், கட்டளைதாரர்கள் உபயத்துடன் நடைபெற உள்ளது. கோவில் சட்டம் அனைத்து வகையிலும் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திருப்பணி கமிட்டி என்பது கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன் திருப்பணி நடைபெற்றால் தான் தேவைப்படும். தற்போது கும்பாபிஷேகத்திற்காக புதுப்பிக்கும் பணி மட்டுமே நடக்கிறது. யாரிடமும் பணம் வசூல் செய்யப்படவில்லை. இதற்கு கமிட்டி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு பாஸ்கர தீட்சிதர் கூறினார்.