ஹஜ் விண்ணப்பதாரருக்கு சிறப்பு கவுன்டர்: பாஸ்போர்ட் அதிகாரி தகவல்!
மதுரை: ஹஜ் விண்ணப்பதாரர்களுக்காக மதுரை, நெல்லை சேவை மையங்களில் சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன,” என மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மணிஸ்வரராஜா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஹஜ் விண்ணப்பங்களை ’தமிழக ஹஜ் கமிட்டி’யிடம் கொடுக்க பிப்., 20 கடைசி நாள். மார்ச் 31 வரை செல்லுபடியாகத்தக்க பாஸ்போர்ட் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஹஜ் கமிட்டியால் ஏற்று கொள்ளப்படும். ஹஜ் யாத்திரை செல்லும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை சரியான ஆவணங்களுடன், போலீஸ் அறிக்கை கிடைத்ததும் பாஸ்போர்ட் உடன் வழங்க மண்டல அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து, அதற்குரிய தேதி மற்றும் நேரத்துடன் ஏ.ஆர்.என்., ஷீட்டுடன், சம்பந்தப்பட்ட மதுரை அல்லது நெல்லை சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் முன்பதிவு தேதி கிடைக்கப் பெறாதவர்கள் மதுரை ரேஸ்கோர்ஸ் மண்டல அலுவலக ஹஜ் சிறப்பு அலுவலரை சந்தித்து முன்பதிவு தேதி பெற்று சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட் பெறுவதில் குறைகள் இருந்தால், சிறப்பு அலுவலரிடம் வேலை நாட்களில் காலை 9 முதல் மதியம் 12 மணி வரை தெரிவிக்கலாம். பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்து போலீஸ் விசாரணை முடியாததாலோ, பாஸ்போர்ட் அலுவலகத்தில் நிலுவையில் இருந்தாலோ அவர்களுக்காக மதுரை மண்டல அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் முகாம் பிப்., 13 காலை 10 முதல் மதியம் 1மணி வரை நடக்கிறது. இவ்வாறு கூறினார்.