களைகட்டியது தைப்பூச பாதயாத்திரை!
பொள்ளாச்சி : பழநிமலை முருகன் கோவிலில் நாளை தைப்பூச விழாவில் பங்கு பெற, பல பகுதிகளிலும் இருந்தும் பாதயாத்திரை வரும் பக்தர்கள் பொள்ளாச்சி வழியே சாரி சாரியாக நடந்து சென்று வருகின்றனர்.
பழநி மலையில் தண்டாயுதபாணியாக வீற்றிருக்கும் முருகப்பெருமான் கோவில் உலகளவில் புகழ் பெற்றதாகும். தை மாதம் வரும் பூச நட்சத்திர தினம் முருகனுக்கு உகந்தது என்பதால், அந்த நாளில் பழநி கோவிலில் பக்தர் கூட்டம் குவிவது வழக்கம். அதில் பெரும்பாலான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவர். கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாக வந்து பழநி முருகனை தரிசிப்பர். மேலும், பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்தும், பல்வேறு வகையான காவடிகள், வேல், சேவல் ஆகியவற்றை முருகனுக்கு நேர்த்திக்கடனாக கொண்டு செல்கின்றனர்.
மேலும் சிலர், சிறிய ரக தேர்களை இழுத்துக்கொண்டு, குழுவாக செல்வதையும் காணமுடிகிறது, தை மாதம் பிறந்ததில் இருந்தே பக்தர்கள் நடைபயணம் வருவது துவங்கினாலும், நாளை (3ம் தேதி) தைப்பூசம் என்பதால், கடந்த சில நாட்களாக கூட்டம் அதிகளவில் உள்ளது.
போலீசார் அறிவுரை : இதில், பொள்ளாச்சி வழியாக பழநி பாதயாத்திரை செல்பவர்கள், கோவை ரோடு, பாலக்காடு ரோடு வழியாக வந்து, பொள்ளாச்சியை கடந்து உடுமலை ரோட்டில் பழநிக்கு நடக்கின்றனர். ரோட்டில் சாரி சாரியாக நடந்து செல்லும் பக்தர்கள், விபத்துகளை தவிர்க்க ரோட்டின் ஓரமாக பாதுகாப்பாக நடந்து செல்ல வேண்டும்; இரவில் நடக்கும் போது, வாகனங்களின் முகப்பு விளக்கை பிரதிபலிக்கும் வகையில், உடைகளில் ரிப்ளெக்டர் ஒட்டிச்செல்வது என அவசியம் என பொள்ளாச்சி போலீசார் பக்தர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.