மாசாணியம்மன் கோவிலில் இன்று மயான பூஜை; கூடுதல் பாதுகாப்பு!
ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், இன்று நள்ளிரவு மயான பூஜை நடைபெற உள்ளது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளவார்கள் என்பதால் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வேண்டுதல் தலங்களில் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் குண்டம் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான, மயானபூஜை இன்று நள்ளிரவு, 1:00 மணிக்கு, ஆழியாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ள சோமேஸ்வரன் கோவில் அமைக்கப்பட்டுள்ள மயானமேடையில் நடக்கிறது.
அங்கு இன்று காலை முதல், முறைதாரர்கள் அம்மனின் உருவாரத்தை அமைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.மயான பூஜையையொட்டி நள்ளிரவு, 1.00 மணிக்கு மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்படும். அதைத்தொடர்ந்து முறைதாரர் மனோகரன் தலைமையில் அம்மன் அருளாளிகள் அருண், குப்புசாமி மற்றும் நூற்றுக்கணக்கான முறைதாரர்கள் மயான மேடைக்கு வந்து அம்மனின் உருவாரத்துக்கு சிறப்பு பூஜை செய்ய உள்ளனர். வால்பாறை டி.எஸ்.பி சக்திவேல் தலைமையில், 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.