கற்கிமலை ஈஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா!
பெ.நா.பாளையம் : கணுவாயில் உள்ள கற்கிமலை ஈஸ்வரர் உடனுறை கருணாம்பிகை அம்மன் கோவில் தைப்பூசத் திருத்தேர்விழா நாளை நடக்கிறது.
கணுவாயில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும், தைப்பூசத் தேர்த்திருவிழா விமரிசையாக நடக்கும்.
இந்தாண்டு விழா கடந்த, 27ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, கொடிமர பூஜை, ஆராதனைகள் நடந்தன. இன்று காலை காவடி திருவீதியுலா, திருவிளக்கு வழிபாடு நடக்கிறது.நாளை காலை, 7:00 மணிக்கு சோமஸ்கந்தர் தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், தொடர்ந்து மாவிளக்கு அழைத்தல், சக்தி அழைத்தலும், மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்கிறது.இம்மாதம், 4ம் தேதி ரிஷப வாகனத்தில் கற்கிமலை ஈஸ்வரர் உடனுறை கருணாம்பிகை அம்மன் திருவீதியுலா நடக்கிறது. தொடர்ந்து, 5ம் தேதி காலை, 10:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, மாலை, 5:00 மணிக்கு கொடி இறக்குதல், மகா அபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கற்கிமலை ஈஸ்வரர் கோவில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.