போலீஸ் பாதுகாப்புடன் பழநி வந்த காரைக்குடி நகரத்தார் வைரவேல்!
பழநி: தைப்பூச விழாவிற்காக காரைக்குடி நகரத்தார் காவடி குழுவினர் மாட்டுவண்டியில்
வைரவேலை போலீஸ் பாதுகாப்புடன் பழநிக்கு கொண்டு வந்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 94 நகரத்தார் காவடி குழுவினர் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலநூறு ஆண்டுகளாக தைப்பூச விழாவிற்கு பாதயாத்திரையாக பழநிகோயிலுக்கு வருகின்றனர். இவ்வாண்டு ஜன.,27ல்கண்டனூரிலிருந்து காவடிகளுடன் புறப்பட்டனர்.
இதில் வைரம் மற்றும் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட வைரவேலை பாரம்பரியமான மரப்பெட்டியில் வைத்து, மாட்டுவண்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை 11 மணிக்கு பழநி வந்தடைந்தனர். பக்தர் சுபாஷ்சுப்ரமணியன் கூறியதாவது: 400 ஆண்டுகளுக்கு மேலாக கண்டனூர், மாயவரம், காரைக்குடி, கோட்டையூர், தேவகோட்டை உள்ளிட்ட 94 நகரத்தார் காவடிகள் எடுத்து வருகிறோம். எங்கள் முன்னோர் செய்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள வேலுடன் கோயிலுக்கு வருகிறோம்.
இங்குள்ள காவடி மண்டபத்தில் வைரவேலுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுவோம். வேலின் நுனிப்பகுதியை மட்டும் தரிசனம் செய்யலாம், முழுமையாக பார்க்க முடியாது தேவகோட்டை மாசிமகத் திருவிழாவில் வைரவேலுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். இன்று தைப்பூச விழா முடிந்தபின் போலீஸ் பாதுகாப்புடனே மாட்டுவண்டியில் வைரவேலுடன் எங்கள் ஊருக்கு திரும்புவோம், என்றார்.