திருச்செந்தூர் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா: குவியும் பக்தர்கள்!
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு வருகை தருகின்றனர்.
முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா இன்று நடக்கிறது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வருகை தருகின்றனர். பலர் காவடியுடனும், பலர் அலங்கார தேர்களில் முருகன் படத்தை அலங்கரித்தும் எடுத்து வருகின்றனர். பலர் தேர்களை முதுகில் அலகு குத்தி இழுத்தும் வருகின்றனர். தைப்பூசத்தன்று அதிகாலை அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் நிகழ்ச்சி நடக்கிறது.
அப்போது பக்தர்ள் கடலில் புனித நீராடுவார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாரை, சாரையாக பஜனை பாடல்களுடன் பாத யாத்திரை வருகின்றனர்.தைப்பூச தினமான இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதணை. 4 க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7 மணிக்கு சுவாமி அஸ்திர
தேவர் கடலில் புனித நீராடும் நிகழ்ச்சி நடக்கிறது. 9 க்கு உச்சிக்கால அபிஷேகம், 12 க்கு உச்சிக்கால தீபாரதணை நடக்கிறது.
பக்தர்களுக்கு காட்சி: சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு தங்க சப்பரத்தில் மஎழுந்தருளுகிறார். சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரமாகி, தீபாரதணை நடக்கும். மாலை 4 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி, எட்டு வீதிகள் வழியாக பக்தர்களுக்கு காட்சி தருவார். பின்னர் சன்னதி தெரு வழியாக கோயில் வந்து சேருகிறார்.