உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெப்பக்குளம் சீரமைப்பு பணி தீவிரம்!

தெப்பக்குளம் சீரமைப்பு பணி தீவிரம்!

அவிநாசி : பூண்டியில் உள்ள பழமையான தெப்பக்குளம் சீரமைக்கும் பணி, தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொங்கேழு சிவாலயங்களில், சுந்தரமூர்த்தி நாயனாரால் தேவாரம் பாடல் பெற்ற திருத்தலமாக, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் விளங்குகிறது. இங்குள்ள தீர்த்தங்களில் குளித்தால், மனநோய் நிவர்த்தியாகும் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பலர் இங்கு தங்கி, திருமுருகநாதரை வழிபடுகின்றனர்.

இக்கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம், கோவிலில் இருந்து 50 மீ., தூரத்தில் உள்ளது. மகாமகக்குளம் என்றழைக்கப்படும் தெப்பக்குளத்தில், தெப்போற்சவம் நடந்து, 25 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. கழிவு நீர் தேங்கும் பகுதியாக, குளம் மாறியம், படித்துறையும் சிதிலமடைந்திருந்தது.திருப்பூரை சேர்ந்த உமாசங்கர் என்பவர், தெப்பக்குளத்தை சீரமைத்து வருகிறார். குளத்தில் தேங்கியிருந்த கழிவு நீர் வெளியேற்றப்பட்டு, படித்துறை சீரமைக்கப்பட்டுள்ளது. மையத்தில் உள்ள நீராழி மண்டபம், புதிதாக கட்டப்படுகிறது.

அவர் கூறுகையில், ""தெப்பக்குளம் மேம்பாட்டு பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. நீராழி மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டு, குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி மட்டுமே எஞ்சியுள்ளது. அடுத்த மாதம் நடைபெற உள்ள தேர்த்திருவிழாவின் போது, தெப்போற்சவம் நடைபெறும், என்றார்.

செயல் அலுவலர் சரவணபவனிடம் கேட்டதற்கு, ""இந்தாண்டு தேர்த்திருவிழாவின்போது, தெப்போற்சவம் நடத்த முயற்சிக்கப்படும். இதுகுறித்து, அறநிலையத்துறை உயரதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !