மாசாணியம்மன் கோவில் மயான பூஜை!
ஆனைமலை: பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் நள்ளிரவில் மயான பூஜை நடந்தது. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வேண்டுதல் தலங்களில், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு குண்டம் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று தொடங்கும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம், 20 ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை, நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு ஆழியாறு ஆற்றங்கரையில், சோமேஸ்வரன் கோவிலில் உள்ள மயான மேடையில் நடந்தது. இதற்காக மயான மேடையில், 14 அடி நீளத்தில் அம்மனின் உருவாரத்தை அமைத்திருந்தனர். மயான பூஜையையொட்டி நள்ளிரவு, 1:00 மணிக்கு மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
அதை தொடர்ந்து முறைதாரர் மனோகரன் தலைமையில், அம்மன் அருளாளிகள் மற்றும் நூற்றுக்கணக்கான முறைதாரர்கள், அம்மன் உருவாரத்துக்கு சிறப்பு பூஜை செய்தனர். இதன் தொடர்ச்சியாக அதிகாலை, 1:30 மணிக்கு பம்பை மேளம் முழங்க, அம்மன் அருளாளி அருண், அருள் வந்து ஆடி உருவாரத்தை சிதைத்தார். அதிலிருந்த எலும்புகளை வாயில் கவ்வியபடி ஆக்ரோஷமாக ஆடினார். பின்னர் பட்டுச்சேலையில் பிடிமண் மற்றும் எலுமிச்சை கனியை எடுத்துக்கொண்டு உப்பாற்றங்கரை வந்தனர்.
அங்கு நள்ளிரவு நடந்த மயான பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று காலையில், சக்தி கும்பஸ்தாபனமும், மாலையில் மகா பூஜையும் நடந்தன. இன்று காலை குண்டம் கட்டுதலும், மாலை, 6:30 மணிக்கு மேல் சித்திரைத்தேர் வடம் பிடித்தலும், அம்மன் வீதி உலாவும் நடைபெறுகிறது. நள்ளிரவு, 10:30 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படும். நாளை காலை பக்தர்கள் குண்டம் இறங்குவர். குண்டம் திருவிழாவையொட்டி, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.