உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஷ்ணு அவதாரங்கள் கணக்கிட முடியாதவை

விஷ்ணு அவதாரங்கள் கணக்கிட முடியாதவை

பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் தெரிவிக்கப்பட்டது.


பல்லடம் அருகே, மகாலட்சுமி நகரில் உள்ள ஹரே கிருஷ்ணா பக்தி யோகா மையத்தில், ஸ்ரீராம நவமி மகோத்சவ விழா நேற்று நடந்தது.


மேற்கு தமிழ்நாடு உதவி மண்டல செயலாளர் சங்கர்ஷண கவுர தாஸ் பிரபு, ராம‌ நவமியின் சிறப்புகள் குறித்து பேசியதாவது:


ஆண்டுதோறும் நாம் ராமநவமி கொண்டாடி வருகிறோம். தினசரியும் ராம நவமி தான். காரணம், கோடிக்கணக்கான பிரபஞ்சங்களிலும், ஒரே நேரத்தில் அவதாரம் எடுக்கக்கூடிய ‌ சக்தி இறைவனுக்கு உண்டு.


பெருமாள் கோவில்களில் உள்ள பத்து அவதாரங்கள்தான் உள்ளன என்று நாம் நினைத்துக் கொண்டுள்ளோம். பகவான் விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதது என்கிறார் பிரம்மதேவர்.


கடலில் எப்படி அலைகளை எண்ண முடியாததோ அதுபோல் பகவானின் அவதாரங்களையும் எண்ண முடியாது என்று பாகவதத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு யுகம்தோறும் பகவான் அவதாரம் எடுக்கிறார்.


பிரபஞ்சத்தை படைக்கும் பிரம்மாவாகவும், காக்கும் விஷ்ணுவாகவும், அழிக்கும் சிவபெருமானாகவும் கிருஷ்ணரே அவதரிக்கிறார். இதை பகவத்கீதையில் அவரே கூறியுள்ளார்.


அனைத்து அவதாரங்களுக்கும் மூலமாக கிருஷ்ணர் உள்ளார். பகவானைப் பற்றி கேட்பதற்கும், நினைப்பதற்கும், பேசுவதற்குமான வாய்ப்புகளை நமக்கு வழங்குகிறார். இதற்காகவே அவர் அவதாரமும் எடுக்கிறார்.


இவ்வாறு அவர் பேசினார்.


முன்னதாக, காலை, 11:00 மணிக்கு ஹரி ராம சங்கீர்த்தனம் நடந்தது. ராமநவமி சிறப்பு உபன்யாசமும், மகாதீபாராதனையும் நடந்தது.


சிறப்பு அலங்காரத்தில், பகவான் கிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !