திருச்சேறை சாரநாதபெருமாள் கோவில் தைப்பூச விடையாற்றி உற்சவம்!
கும்பகோணம் :திருச்சேறை சாரநாத பெருமாள்கோவில் தைப்பூச விடையாற்றி விழா, தெப்ப
உற்சவத்தில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.கும்பகோணம் திருச்சேறையில், 108 வைணவத்தலங்களில் 12வது திருத்தலமான சாரநாயகி சமேத சாரநாதபெருமாள் கோவில் உள்ளது. தைப்பூச தேரோட்டம் நடைபெறும் தலமாகும்.நடப்பாண்டு தைப்பூச தேரோட்ட திருவிழா, கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கியது. 29ம் தேதி கருடவாகனத்தில் பெருமாள்
தாயார் வீதியுலா நடந்தது. 31ம் தேதி பெருமாள், தாயார் திருக்கல்யாணம் நடந்தது.பிப்ரவரி 3ம் தேதி பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, காலை 9 மணிக்கு தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான 9 ம் தேதியன்று, விடையாற்றி விழாவும், நேற்று முன்தினம் இரவு, சாரநாதபெருமாள் பஞ்சலெட்சுமிகளுடன், புஷ்பலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது.
தொடர்ந்து, சாரபுஷ்கரணியில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். வலம், இடமாக மூன்று முறை வலம் வந்தார். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை, ஆலய தக்கார் நிர்மலா தேவி, நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணன், மற்றும் ஆலயப்பணியாளர்கள் செய்து இருந்தனர்.