கோவில் குளத்தை பராமரிக்க கோரிக்கை!
உத்திரமேரூர்: வயலக்காவூரில் உள்ள கோவில் குளத்தை துார்வாரி சீரமைக்க, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலக்காவூர் கிராமத்தில், இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான வாசீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான குளம், ஒரு ஏக்கர் பரப்பளவில் கோவிலுக்கு அருகில் உள்ளது. கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், இக்குளத்து நீரை, அப்பகுதிவாசிகள் குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தி வந்துள்ளனர். பின், செய்யாற்று குடிநீர் வசதி இப்பகுதிக்கு கிடைத்ததும், குளித்தல் மற்றும் துணி துவைத்தல் போன்ற தேவைகளுக்கு, இக்குளத்தை பயன்படுத்தி வந்தனர். தற்போது, இக்குளம் பராமரிப்பின்றி துார்ந்து போய், முட்செடி மற்றும் புதர்கள் அடர்ந்து சீரழிந்து உள்ளது. குளத்தின் நீர்வரத்து கால்வாயும் துார்ந்து போனதால், மழைக்காலத்தில் குளத்திற்கு தண்ணீர் வர வழி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இக்குளத்தை துார்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.