மனம் உருக்கும் மகா சிவராத்திரி: சிவாலயங்களில் கோலாகலம்!
சென்னை: துாக்கத்தின் அருமையையும், விழிப்பின் சிறப்பையும் ஒரே நேரத்தில் உணர்த்துவது தான் மகா சிவராத்திரி. சிவாலயங்களில் சிவராத்திரி ஆகம அடிப்படையில் கொண்டாடப்படுகிறது என்றால், அம்மன் கோவில்களில், அதுவே, வேறொரு விதமாக கொண்டாடப்படுகிறது. சென்னையின் தண்டையார்பேட்டை, மயிலாப்பூர், எம்.கே.பி.,நகர், செங்குன்றம், திருவள்ளூர் ஒண்டிக்குப்பம் என, பல பகுதிகளில் எடுக்கப்பட்ட படங்கள் இங்கே இடம் பெற்றுள்ளன. மகா சிவராத்திரியின் ஒரு பரிமாணத்தை நமக்கு காட்ட இவையும் முயல்கின்றன.
சிலிர்க்க வைத்த மயான கொள்ளை: மகாசிவராத்திரியை தொடர்ந்து, நேற்று, சென்னையில் உள்ள அம்மன் கோவில்களில் நடந்த மயானகொள்ளை நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* தண்டையார்பேட்டை, டி.எச்., சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் 53வது ஆண்டாக மயான கொள்ளை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
* இளையமுதலி தெருவில் உள்ள அங்காளம்மன் கோவிலில் 33வது ஆண்டாக மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
* திருவல்லிக்கேணி கிருஷ்ணாம்பேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று, மயான கொள்ளை நடந்தது.
கெடுபலன், துயரம் ஆகியவை தூர விலக வேண்டுமென்று வேண்டி, மயானகொள்ளையில் பங்கேற்ற பலர், சுண்டல், காய்கறிகள், கோழி ஆகியவற்றை சூறை விட்டனர். 30க்கும் மேற்பட்ட பெண்கள் ஆக்ரோஷமாக நடனமாடினர். காளி, அங்காளம்மன் வேடமிட்டோர் மண்டை ஓடு மற்றும் பச்சைக் கறி ஆகியவற்றை வாயில் கவ்வியபடி நடனமாடினர். தண்டையார்பேட்டை டி.எச்., சாலையில் நடந்த மயான கொள்ளையில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், போலீசார் லேசாக தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.