உடுமலை சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா!
உடுமலை : உடுமலை, மறையூர் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில், மகா சிவராத்திரி விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இரவு முழுவதும் நடந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். உடுமலை பூளவாடியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு கணபதி ேஹாமம், அம்மன் அழைப்பு, அபிேஷக ஆராதனை நடந்தது; நேற்று காலை, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தில்லை நகரில் உள்ள ரத்தினலிங்கேஸ்வரர் கோவில், கொடிங்கியத்தில் உள்ள மகாலட்சுமி அம்மன் கோவில், குறிச்சிக்கோட்டை மாரியம்மன் கோவிலில் உள்ள சிவலிங்கேஸ்வரர் சன்னதி, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், புவன கணபதி கோவில், ருத்ரப்பா நகர் பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில், ஏரிப்பாளையம் சித்தாண்டீஸ்வரர் கோவில்களில் மகாசிவராத்திரி முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை சிறப்பு பூஜைகள் நடந்தன.
திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்றுமுன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை, சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். நேற்று அதிகாலை நடந்த பிரம்மா, சிவன், விஷ்ணு சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். உடுமலை கொங்கல் நகரத்தில் உள்ள கானியப்ப மசராயர் கோவிலில், மகா சிவராத்திரி முன்னிட்டு, நேற்று அதிகாலை 4:30 மணிக்கு, கிருஷ்ணர் கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகள், கானியப்ப மசராயர் கோவிலுக்கு தங்கள் வாகனங்களில் புறப்பட்டனர். உற்சவ மூர்த்திகளுக்கு மசராயர் கோவிலில், நேற்று காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, கொங்கல் நகரம் உள்ளிட்ட அருகில் உள்ள கிராமங்களில் சுவாமிகள் வீதியுலா நடந்தது; நள்ளிரவு, 12:00 மணிக்கு, உற்சவ மூர்த்திகள் கிருஷ்ணர் கோவிலை அடைத்தனர். கொங்கல் நகரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபட்டனர். மறையூர்: மறையூர், கோவில்கடவு தென்காசிநாதன் கோவிலில், மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் காலை திருப்பள்ளி எழுச்சி, உஷபூஜை மற்றும் திருநடையில் பறை எடுத்தல், இளநீர், பால், பன்னீர் அபிேஷகம், நடந்தது. காலை, 10:00 மணிக்கு, திருவாபரண ஊர்வலம், மதியம் உச்சிகால பூஜை, மாலை தாலப்பொலி ஊர்வலத்தை தொடர்ந்து, தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், பூஜையும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.