திருப்பூர் மகா சிவராத்திரி விழா: பக்தர்கள் தரிசனம்!
மகா சிவராத்திரி விழா, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் கோலாகலமாக கொண் டாடப்பட்டது; ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயமான அவிநாசிலிங்கேஸ்வரர் கோவி லில், மகா சிவராத்திரி விழாவையொட்டி, விடிய விடிய 4 கால பூஜைகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு காலத்தின்போது, லிங்கத்திருமேனிக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டு, திருமுறை, வேத பாராயணத்துடன் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. கருணாம்பிகை அம்மன் சன்னதி எதிரில் உள்ள மண்டபத்தில், சிவனடியார்கள் விடிய விடிய சிவபூஜை மேற்கொண்டனர். திருப்பூர் சாய் கிருஷ்ணா நாட்டியாலயா மாணவியரின் சிவ தாண்டவம் உள்ளிட்ட பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள், வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
* ஈஷா யோக அவிநாசி மையம் சார்பில், சேவூர் ரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கில், "ஈசனுடன் ஒரு ராத்திரி என்ற தலைப்பில், மகா சிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது; பக்தர்களுக்கு அன்னதானம் வழங் கப்பட்டது.வழக்கத்தை விட இந்தாண்டு, அவிநாசி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதற்கேற்ப வசதிகளை செய்ய, கோவில் நிர்வாகம் தவறி விட்டது. அர்த்த மண்டபத்துக்குள் நுழைவதற்குள் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பல்லடம்: பல்லடம், சித்தம்பலத்தில் உள்ள கோளாறுபதி நவக்கிரக கோட்டையில், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில், சிறப்பு பூஜை நடந்தது. அபிஷேகம் செய்து, 108 சிவலிங்கத்துக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்கதர்கள், சிவராத்திரி சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பொங்கலூர்: அலகுமலை கைலாசநாதர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை துவங்கி, நேற்று அதிகாலை வரை, 4 கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள், "சிவசிவா என கோஷமிட்டவாறே, இரவு முழுவதும் கண் விழித்திருந்து, கைலாசநாதரை வழிபட்டனர்.
பெரியபுராணம் குறித்து, ஓய்வு பெற்ற ஆசிரியர் முத்துசாமி பேசியதாவது: கோவிலுக்குள் அமைதியாக செல்ல வேண்டும். ஓட்டப்பந்தயம் போல் ஓடக்கூடாது. குழந்தைகளுக்கு சிலர் தாய்ப்பால் கொடுக்கின்றனர்; சிலர், மாட்டுப்பால் அல்லது ஆட்டுப்பால் புகட்டுகின்றனர். குழந்தை நன்றாகவே வளர்கிறது. அதுபோலவே இறைவனும். நாம் தெரிந்து வணங்கினாலும், தெரியாமல் வணங்கினாலும், சிவன் ஏற்றுக்கொள்வார்; நாம் இறைவனின் குழந்தைகள்.சிவராத்திரி நன்னாளில், குழந்தைகளையும் கோவிலுக்கு அழைத்து வர வேண்டும். சினிமாவுக்கோ, சுற்றுலாவுக்கோ அழைத்துச் செல்கிறோம்; அதை விட முக்கியம், கோவிலுக்கு அழைத்துச் செல்வது. சிவனடியார்கள், சிவாச்சாரியர்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். காரணம், அது சிவனுக்கு கொடுப்பதற்கு சமம். தூங்கச் செல்லும் போதும், கடவுளை நினைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார். இதேபோல், கண்டியன்கோவில் கருணாம்பிகை உடனமர் கண்டீஸ்வரர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது; பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கொடுவாய் ஈஸ்வரன் கோவில், பெருந்தொழுவு பாண்டீஸ்வரர் கோவில், புத்தரசல் சோழீஸ்வரர் கோவில்களிலும், சிவராத்திரி விழா கோலாகலாமாக கொண்டாடப்பட்டது.
உடுமலை: உடுமலை திருமூர்த்திமலையில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய 3 கடவுள்கள் ஒருங்கே அமைந்த அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, மகாசிவராத்திரி விழா, 16ல் துவங்கியது. பாரம்பரியமாக நடைபெறும் திருச்சப்பர பூஜை, பூலாங்கிணறில் நடந்தது. நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, பூலாங்கிணறில் இருந்து, அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு திருச்சப்பரம் கொண்டு வரப்பட்டு, கோவிலை அடைந்ததும், சிறப்பு பூஜை செய்யப்பட்டது.நேற்று முன்தினம் இரவு துவங்கி, நேற்று அதிகாலை 5:00 மணி வரை, 4 கால பூஜை, சிறப்பு அலங்காரம், சோடச உபசார தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. நேற்று அதிகாலை வரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உடுமலை மற்றும் பொள்ளாச்சி பகுதி பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.கடத்தூர் கோமதியம்மன் உடனமர் அர்ச்சுனேசுவரர் கோவில், சோழமாதேவியில் உள்ள குங்குமவல்லியம்மன் உடனமர் குலசேகரசாமி, கொழுமம் தாண்டேஸ்வரர் கோவில், விசாலாட்சி அம்மன் உடனமர் காசிவிசுவநாதர் கோவில்களிலும் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை, ஆராதனை நடைபெற்றன.