ஆற்றுகால் பொங்கல் விழாவுக்கு 4 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு!
நாகர்கோவில்: பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பொங்கல் விழாவுக்கு நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா கூறினார். மதுரையை எரித்த கண்ணகி கொடுங்கல்லூர் செல்லும் வழியில் , திருவனந்தபுரம் அருகே கிள்ளியாற்றின்கரையில் தங்கியதாகவும், இங்கு அவருக்கு கோயில் எழுப்பதி ஆற்றுகால் தேவி என பெயரிடப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இங்கு மாசி மாதம் நடைபெறும் பத்து நாள் பொங்கல் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு திருவிழா 25-ம் தேதி தொடங்கிய மார்ச் ஆறாம் தேதி வரை நடக்கிறது. ஐந்தாம் தேதி லட்சக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் பொங்கலிடும் நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்வது தொடர்பாக அனைத்து துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா தலைமையில் நடைபெற்றது. இதில் தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் ரமேஷ் சென்னித்தலா நிருபர்களிடம் கூறியதாவது: பொங்கல் விழா பாதுகாப்பு பணியில் நான்காயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள். திருவிழா பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகூல் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும். பக்தர்களுக்கு இலவசமாக வழங்கும் உணவு மற்றும் குளிர் பானங்களை உணவு தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் பரிசோதனை செய்வார்கள். சுகாதரத்துறை சார்பில் அனைத்து பகுதிகளிலும் மருத்துவக்குழுவினர் பணியில் அமர்த்தப்படுவர். மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் திருவனந்தஈபுரத்துக்கு இயக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.