கோவில் அர்ச்சகர்களுக்கு புத்தாக்க பயிற்சி நிறைவு
விழுப்புரம்: இந்து சமய அறநிலைய துறை விழுப்புரம் மாவட்டம் சார்பில் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பட்டாச்சாரியார்களுக்கான புத்தாக்க பயிற்சி நிறைவு விழா நடந்தது. இந்து சமய அறநிலைய துறை சாார்பில் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பட்டாச்சாரியார்களுக்கு ஆண்டுதோறும் புத்தாக்க பயிற்சி நடக்கிறது. இந்தாண்டும், வேதம் மற்றும் ஆகமம், சைவ சித்தானந்தம், சில்பசாஸ்திரம், திருமுறை ஆகிய சைவ முறை திருமுறை ஆகம பயிற்சியும், பஞ்சதாத்திர ஆகமம், வைகாசை ஆகமம், திவ்ய பிரபந்தம், சில்ப சாஸ்திரம் ஆகிய வைணவ திவ்ய பிரபந்த பயிற்சிகள் நடந்தது. கடந்த ஆறு வாரங்களாக 2 மணி நேரம் நடந்த பயிற்சிக்கான நிறைவு விழா விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று நடந்தது. சேர்மன் பாஸ்கரன் தலைமை தாங்கி, பயிற்சி முடித்த 47 பேருக்கு சான்று வழங்கினார். இதில், அறநிலைய துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் முத்துலட்சுமி, ஆய்வாளர் சரவணன், ஆலய அறங்காவலர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.