பூதேரியம்மன் கோவில் அம்மன் கண் திறந்ததால் பரபரப்பு!
வேலூர்: பள்ளிகொண்டா ஏரி, பூதேரியம்மன் கோவில் அம்மன் கண் திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா ஏரி அருகே, பூதேரியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள பூதேரியம்மனை வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்கும் என்பதால் தினமும் பக்தர்கள் அதிகளவில் வந்து, அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.நேற்று மதியம், 12.30 மணிக்கு கோவில் பூசாரி முருகேசன் அம்மன் சன்னதியை மூட சென்றார். அப்போது, திடீரென, பூதேரியம்மன் கண் திறந்துள்ளார். இதைப்பார்த்த பூசாரி பக்தி பரவசத்தில் மயக்கம் அடைந்தார்.மதியம், 1.30 மணி வரை கோவில் மூடாமல் திறந்து இருந்ததால் சந்தேகம் அடைந்த அருகில் இருந்தவர்கள், கோவிலுக்கு சென்று மயங்கி கிடந்த பூசாரியை தண்ணீர் தெளித்து எழுப்பி விசாரித்தனர்.அப்போது, அம்மன் கண் திறந்தது குறித்து பூசாரி முருகேசன் பொதுமக்களிடம் கூறியுள்ளார். அவர்கள், அம்மன் சன்னதிக்கு சென்று பார்த்த போது, அம்மன் கண் திறந்து இருந்ததை கண்டு பக்தி பரவசம் அடைந்து, அம்மனை வணங்கினர்.தகவல் அறிந்து, அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், பூதேரியம்மன் கோவிலில் குவிந்து அம்மனை வணங்கினர். மதியம் 2.30 மணிக்கு மேல் அம்மன் கண் பழையபடி மூடிக்கொண்டது.இதையடுத்து கோவிலை மூடாமல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். கூட்டம், கூட்டமாக பக்தர்கள் கோவிலுக்கு சென்று அம்மனை வணங்கி வருகின்றனர்.