புற்றுமண், தானியங்களால் 208 சிவ லிங்கங்கள் வடிவமைப்பு
திருத்தணி: சிவராத்திரியை முன்னிட்டு, பெண் ஒருவர், 10 ஆண்டுகளாக, புற்றுமண், பல்வேறு வகையான தானியங்களால், 208 சிவலிங்கங்கள் வடிவமைத்து, ஏழு நாட்கள் சிறப்பு பூஜை நடத்தி, புண்ணிய ஸ்தலங்களில் லிங்கங்களை கரைத்து வருகிறார். திருத்தணி, ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் துளசியம்மாள், 50. இவர், சிவராத்திரி விழாவை முன்னிட்டு, தன் வீட்டில், புற்று மண்ணால், பஞ்சபூதலிங்கம், நாகலிங்கம், கேதார்நாத் லிங்கம், சக லிங்கம் (ஒரே லிங்கத்தில் 1,008 லிங்கம்) 108 லிங்கம் மற்றும் பெரிய லிங்கம், பயத்தம் பருப்பு, கடுகு, எள், உளுத்தம் பருப்பு, ஜவ்வரிசி, பார்லி அரிசி, பசு சாணம், சந்தனம், விபூதி, வெல்லம், மணல் மற்றும் நவதானியம் போன்ற தானிய மாவுகளால், சிவலிங்கங்கள் என, மொத்தம், 208 லிங்கம் வடிவமைத்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக, உலக அமைதிக்காகவும், இந்த சிவலிங்கங்களை வைத்து, ஏழு நாட்கள் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடத்துகிறார். இந்த ஏழு நாட்களையும், அப்பகுதியில் உள்ள பெண்களை அழைத்து வந்து பக்தி பாடல்கள் பாடி சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடத்துகிறார். பின்னர் ஏழு நாட்கள் கழித்து, சிவ லிங்கங்களை புண்ணியத்தலங்களில் கரைப்பார்.