மேல்மலையனூர் அங்காளம்மன் மாசி தேர்திருவிழா!
மேல்மலையனூர்: அங்காளம்மன் கோவிலில் மாசி தேர்திருவிழாவில் லட்கணக்கான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பிரிசித்தி பெற்ற மாசி பெருவிழா கடந்த 17ம் தேதி மகா சிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் துவ ங்கியது. 18ம் தேதி மயான கொள்ளையும், இம் மாதம் 21ம் தேதி தீமிதி விழாவும் நடந்தது. முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல் இன்று மாலை நடந்தது. பிரம்மஹத்தி தோஷம் பிடித்து, பித்தனாக திரியும் சிவபெருமான் மகா சிவராத்திரியன்று இரவு மேல்மலையனூர் மயானத்தில் வந்து தங்குகிறார். மறுநாள் மாயானக்கொள்ளையில் அங்காளம்மன் விஸ்வரூபம் எடுத்து பிரம்ம கபாலத்தை ஆட்கொண்டு, சிவபெருமானின் பி ரம்மஹத்தி தோஷத்தை நீங்குகிறார். இதில் ஆனந்தமாகும் சிவ பெருமான் தில்லையில் தாண்டவம் ஆடுவதாக இக்கோவில் ஸ்தல புராணம் கூறுகின்றது.மயான கொள்ளையில் விஸ்வரூபம் எடுக்கும் அங்காளம்மனை சாந்தப்படுத்த தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் சேர்ந்து தேரின் கரமாகவும், அச்சாணியாகவும், சிம்மாசனமாகவும் இருந்து நடத்தும் விழாவை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் திருத்தேர் உற்சவம் நடக்கிறது. தேரில் வரும் அம்மனை வணங்கும் போது அனைத்து தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோரை ஒரு சேர வணங்கிய நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோவிலின் ஐதீகத்தின் படி புதிதாக வடிமைக்கப்பட்ட தேரில் நேற்று விழா நடந்தது. இன்று மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனை தேரில் ஏற்றினர். மாலை 4.20 மணிக்கு மகா தீபாராதனையுடன் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி துவங்கிய து.லட்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். தேர் பவனியின் போது பழங்கள், காய்கறிகள், உணவு பொருட்கள், தானியங்கள், நாணயங்களை பக்தர்கள் தேரின் மீது வீசி நேர்த்தி கடன் செலுத்தினர். இதில் கலெக்டர் சம்பத், எம்.எல்.ஏ., கணேஷ்குமார், தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான், விழுப்புரம் ஆர்.டி.ஓ., அனுசுயா தேவி, முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் எஸ்.பி., விக்ரமன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்கினர்.