திருச்செந்தூருக்கு குமரியில் இருந்து காவடிகள் பயணம்
நாகர்கோவில் : திருச்செந்தூர் மாசி பெருந்திருவிழாவை ஒட்டி குமரி மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான காவடிகள் புறப்பட்டு சென்றது. திருச்செந்தூரில் மாசி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை ஒட்டி குமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நேர்ச்சை காவடிகள் எடுத்து செல்வது வழக்கம். நேற்று இந்த காவடிகள் பவனி புறப்பட்டது. திங்கள்சந்தை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காவடிகள் புறப்பட்டது. இந்த காவடிகள் அனைத்தும் திங்கள் சந்தையில் ஒரு நேரத்தில் வந்து சேர்ந்த போது பக்தகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மலர் காவடி, வேல்காவடி, பன்னீர் காவடி, பறக்கும் காவடி என பல்வகை காவடிகளை பக்தர்கள் சுமந்து வந்தனர். வெற்றி வேல் முருகா கோஷத்துடன் இவர்கள் காவடி எடுத்து சென்றனர். இந்த ரோட்டில் நேற்று மதியம் முதல் போக்குவரத்து மாற்றி விடப்பட்டிருந்தது. இந்த காவடிகள் அனைத்தும் திருச்செந்தூருக்கு கால்நடையாகவே செல்கிறது. அவர்களுடன் திரளான பக்தர்களும் நடந்து சென்றனர்.