உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலுக்குள் ஷூ அணிந்து சென்ற வனத்துறையினர்: பக்தர்கள் அதிருப்தி!

கோவிலுக்குள் ஷூ அணிந்து சென்ற வனத்துறையினர்: பக்தர்கள் அதிருப்தி!

திருப்பூர்: திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் நடந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில், வனத்துறை அதிகாரிகள் ஷூ அணிந்தபடி, ராஜகோபுர வாசல் வழியாக சென்று, பிரகாரங்களில் சுற்றி வந்தது, பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளையொட்டி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 969 கோவில்களில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன. திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில், வனத்துறை சார்பில், வில்வ மரக்கன்று நடப்பட்டது. இதற்காக, மாவட்ட வன அலுவலர், ரேஞ்சர்கள், அலுவலர்கள், வன பாதுகாவலர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் கோவில் வளாகத்தில் திரண்டிருந்தனர். அவர்களில் சிலர், ஷூக்களை கழற்றி வைத்துவிட்டு, கோவிலுக்குள் சென்று வழிபட்டு, மரக்கன்று நடும் பணியை மேற்கொண்டனர். சில அதிகாரிகள், ஷூக்களை கழற்றாமல், ராஜ கோபுர வாசல் வழியாக உள்ளே சென்று, கோவில் கொடிமரம், பலி பீடம், நந்தி அருகே நடமாடிக் கொண்டிருந்தனர். உற்சவ மூர்த்திகள் கோவிலை வலம் வரும், சுற்றுப்பிரகாரத்திலும் ஷூ அணிந்தபடி சென்றது, பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் எடுத்துரைத்தும், சில அதிகாரிகள், ஷூவை கழற்றாமல் கோவிலுக்குள் சென்றனர். இது, பக்தர்களை முகம் சுழிக்க வைத்தது. மாவட்ட வன அலுவலர் தன்ராஜிடம் கேட்டபோது, கோவில் தெற்கு பகுதி கதவு வழியாக, சிலர் ஷூ அணிந்து வந்திருந்தனர். சிறிது நேரத்துக்குப்பின், அவர்கள் வெளியேறி விட்டனர். சிலர், ஷூவை ஓரமாக கழற்றி வைத்திருந்தனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !