உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரியில் புதிய மறைமாவட்ட பிஷப் பதவியேற்பு!

குமரியில் புதிய மறைமாவட்ட பிஷப் பதவியேற்பு!

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் ஆர்.சி. கிறிஸ்தவ மறை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு புதிய மாவட்ட பிஷப்பாக ஜெரோம்தாஸ் வறுவேல் பொறுப்பேற்றார். குமரி மாவட்டத்தில் ஆர்.சி. கிறிஸ்தவர்களுக்காக கோட்டார் மறை மாவட்டம் செயல்பட்டு வந்தது. இதனை இரண்டாக பிரித்து குழித்துறையை தலைமையகமாக கொண்டு புதிய மறை மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று ஒரு பகுதி கிறிஸ்தவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு சில மாதங்களுக்கு முன்னர் போப் ஆண்டவர் அனுமதி வழங்கினார். இதை தொடர்ந்து குழித்துறை மறைமாவட்டம் உருவாக்கப்பட்டு, பிஷப்பாக ஜெரோம்தாஸ் வறுவேல் நியமிக்கப்பட்டார். புதிய ஆயர் திருநிலைப்பாடு செய்து வைக்கும் விழா நேற்று மாலை சித்திரங்கோட்டில் நடைபெற்றது. கோட்டார் ஆயரும், தமிழக ஆயர் பேரவை தலைவருமான பீட்டர் ரெம்ஜியூஸ் தலைமை வகித்தார். மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி மறையுரை நிகழ்த்தினார். தொடர்ந்து நடைபெற்ற திருப்பலியில் 300 பேர் கொண்ட பாடல் குழுவினர் சிறப்பு ஆராதனை பாடல்கள் பாடினர். ஜெரோம்தாஸ் வறுவேல் பிஷப்பாக நியமிக்கப்பட்ட போப் ஆண்டவரின் அறிக்கையை படித்து திருநிலைப்படுத்தப் பட்ட பின்னர் குழித்துறை மறை மாவட்ட பங்கு தந்தையர்கள் ஒவ்வொருவராக சந்தித்து, அவர் கீழ் பணியாற்றுவதாக உறுதியளித்தனர். பின்னர் புதிய பிஷப் ஆசியுரை வழங்கினார். விழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். நேற்று மாவட்டத்தில் ஆர்.சி. கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !