உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்பு காரமடையில் பக்தர்கள் அதிருப்தி!

தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்பு காரமடையில் பக்தர்கள் அதிருப்தி!

மேட்டுப்பாளையம் : தேர் செல்லும் நான்கு வீதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை, உடனடியாக அகற்ற வேண்டும் என, ஆலோசனைக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில், காரமடை அரங்கநாதர் கோவில், மிகவும் பிரசித்தி பெற்ற வைஷ்ணவ ஸ்தலம். இங்கு தேர்த்திருவிழா வரும், 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மார்ச் 1ல் கருடசேவையும், 2ல் பெட்டத்தம்மன் அழைப்பும், 3ல் திருக்கல்யாண உற்சவமும், அன்று இரவு யானை வாகன உற்சவமும் நடக்கிறது. 4ம் தேதி காலை ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை 3:15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. வரும், 5ம் தேதி வெள்ளைக்குதிரையில் பரிவேட்டையும், 6ம் தேதி சேஷ வாகனத்தில் தெப்பத்திருவிழாவும், 7ம் தேதி சந்தான சேவை சாற்றுமுறை உற்சவமும் நடக்கிறது. தேர்த்திருவிழா குறித்து, கோவிலில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சின்னராஜ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் நந்தகுமார் வரவேற்றார். வேதவியாசர், சுதர்சன பட்டர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ஞானசேகரன், பேரூராட்சி தலைவர் ஆறுமுகசாமி, உறுப்பினர் துரைசாமி மற்றும் மிராசுதாரர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், பொதுமக்கள் பேசுகையில், தேர் செல்லும் வீதிகளை நன்கு பராமரித்து, சுத்தமாக வைக்க வேண்டும். நான்கு வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். அதிகமான இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும். பக்தர்களுக்கு போதுமான சுகாதாரம், குடிநீர் வசதிகள் செய்ய வேண்டும். அதிகமான இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்றனர். பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், சுற்றியுள்ள பேரூராட்சிகளில் இருந்தும், காரமடை ஒன்றியத்தில் உள்ள எட்டு ஊராட்சிகளில் இருந்தும், துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, உடனுக்குடன் துப்புரவு பணிகள் செய்யப்படும். லாரிகள் மூலம் குடிநீர் வசதிகள் செய்யப்படும். 10க்கும் மேற்பட்ட இடங்களில், தற்காலிக கழிப்பிடங்கள் வைக்கப்படும் என, அறிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !