திருப்போரூர் கந்தசுவாமி மாசி கிருத்திகை விழா: பக்தர்கள் குவிந்தனர்!
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் மாசி கிருத்திகை விழா நேற்று கோலாகலமாக நடந்தது.திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி கிருத்திகை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில், இந்தாண்டு மாசி கிருத்திகையை ஒட்டி, நேற்று நள்ளிரவு, 1:00 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 10:00 மணி அளவில், புருஷாமிருக வாகனத்தில் சுவாமி எழுந்தருளி, வீதியுலா வந்தார். பிரணவ உபதேச உற்சவமும் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரவணப் பொய்கையில் நீ ராடி, நீண்ட வரிசையில் நின்று கந்தனை வழிபட்டனர். காவடிகள் எடுத்தும், அலகுகள் குத்தியும் பிரார்த்தனையாக வலம் வந்தனர். மாலை 5:00 மணியளவில், உற்சவருக்கு மகாபிஷேகம் நடந்தது. திருமண மண்டபங்களில் தேவாரம் மற்றும் பக்தி பாடல்கள் கச்சேரி நடத்தப்பட்டன. விழாவில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.