சந்திரசூடேஸ்வர் திருவிழா முன்னிட்டு நந்தி ஊர்வலம்!
ஓசூர்: ஓசூர் மலைக்கோவில் திருவிழாவை முன்னிட்டு, கல்யாண சூடேஸ்வரர் கோவிலில் இருந்து, நந்தி ஊர்வலம் சென்றது. ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீது அமைந்துள்ள சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, வரும், 5ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, கடந்த, 27 ம் தேதி, கோவிலில் இருந்து சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள், விநாயகர், முருகர் ஆகிய உற்சவ மூர்த்திகள், தேர்ப்பேட்டை கல்யாண சூடேஸ்வரர் கோவிலுக்கு, ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். கடந்த, 1ம் தேதி இரவு, மயில்வாகன உற்சவம் நடந்தது.
இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு, 9 மணிக்கு, சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள், விநாயகர், முருகன் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு, சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மேள, தாளங்கள் மற்றும் வாண வேடிக்கை முழங்க, நந்தி வாகன உற்சவம் நடந்தது. விழாவின் தொடர்ச்சியாக, நேற்று இரவு, 9 மணிக்கு, நாகவாகன உற்சவம் நடந்தது. மேலும், இன்று (மார்ச், 3) ரிஷப வாகன உற்சவமும், 4ம் தேதி இரவு, 9 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 10 மணிக்கு, யானை வாகன உற்சமும் நடக்கிறது.