சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.50 லட்சம் உண்டியல் வசூல்!
திருச்சி : திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமன்றி, வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதோடு, உண்டியல் காணிக்கையும் செலுத்துகின்றனர்.இதற்காக, கோவிலில், 35 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
மாதத்தில், மூன்று முறை உண்டியல்கள் திறந்து, காணிக்கை எண்ணப்படுகிறது. அதன்படி, நேற்று, 19 உண்டியல்கள், கோவில் இணை ஆணையர் தென்னரசு, அறநிலையத்துறை திருச்சி உதவி ஆணையர் முல்லை, கரூர் உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், சமயபுரம் கோவில் முதுநிலை கணக்கு அதிகாரி மாலதி, மேலாளர் மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது.கோவில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள், கல்லூரி மாணவிகள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 49 லட்சத்து, 75 ஆயிரத்து 935 ரூபாய் ரொக்கம் இருந்தது. தங்க நகைகள் ஒரு கிலோ, 110 கிராமும், வெள்ளி நகைகள், மூன்று கிலோ, 880 கிராமும் இருந்தது.மேலும், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேஷியா மற்றும் அரபுநாடுகளின் கரன்ஸிகள், 172 இருந்தது.