விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம்!
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக தெப்பல் உற்சவத்தையொட்டி, சண்முக சுப்ரமணியர் சுவாமி தெப்பல் உற்சவத்தையொட்டி புஷ்ப பல்லக்கில் குளத்தில் உலா வந்து அருள்பாலித்தார். விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவம், கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நகராட்சி நிர்வாகம் சார்பில் நடந்த தெப்பல் உற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம் இரவு நுõற்றுக்கால் மண்டபத்தில் வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று (6ம் தேதி) அதிகாலை 2:45 மணிக்கு அம்மன் குளத்தில், தெப்பல் உற்சவம் துவங்கி, காலை 5:00 மணி வரை மூன்று முறை வலம் வந்தது. ஏராளமானோர் குளத்தைச் சுற்றி வந்து, தரிசனம் செய்தனர்.
மின்கம்பி அறுந்ததால் பரபரப்பு: சுவாமி வீதியுலா செல்லும் பாதைகளில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள், மரக் கிளைகளை அகற்றவும், பழுதான சாலையை சீரமைக்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், சுவாமி வீதியுலா சென்றபோது, நகராட்சி அலுவலகம் அருகே குடியிருப்புக்குச் சென்ற மின்கம்பி, சுவாமி பல்லக்கில் சிக்கி, அறுந்து விழுந்தது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.