காரமடை அரங்கநாதர் கோவிலில் தண்ணீர் சேவை!
ADDED :3868 days ago
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் தண்ணீர் சேவை நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், தெப்பக்குளத்தில் இருந்து தண்ணீரை எடுத்துச் சென்று, சுவாமி மீது ஊற்றி அபிஷேகம் செய்தனர்.காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசிமகத் தேர்த்திருவிழா கடந்த மாதம், 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தேரோட்டத்தின் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தெப்பக்குளத்தில் இருந்து பைகளில் தண்ணீரை எடுத்துச் சென்று, அரங்கநாதர் பெருமாள் மீது ஊற்றி, நேர்த்திக்கடன் செலுத்தினர். தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரில் பக்தர்கள் தவறி விழுந்தால், உடனடியாக காப்பாற்ற, மேட்டுப்பாளையம் தீ அணைப்பு வீரர்கள் பரிசலில் தயார் நிலையில் இருந்தனர். பைகளில் தண்ணீரை எடுத்துச் செல்லும் ஒவ்வொரு குழுவினரும், ஜமாப் மேளம் அடித்து, நடனமாடி கோவிலுக்கு சென்றனர்.