திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில், மாசித் திருவிழாவையொட்டி, தேரோட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில், பிப்ரவரி, 22ம் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. மார்ச், 1ம் தேதி, கொடியேற்றத்துடன் மாசிப்பெருந்திருவிழா தொடங்கியது.விழா துவக்க நாளில், திருவப்பூர் குலாலர் தெரு திடலிலிருந்து புரவி எடுத்துச் சென்று சிறப்பு அபிஷேகம், வழிபாடு செய்தனர். தொடர்ந்து, திருக்கோகர்ணேசர் உடனுறை பிரஹதாம்பாள் கோவிலில் உற்சவ மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அங்கிருந்து ஊர்வலமாக சென்று, திருவப்பூர் கோவிலை அடைந்த அம்மனுக்கு, காப்பு கட்டும் வைபவம் நடைபெற்றது. இதையடுத்து, ஒவ்வொரு நாளும் அன்னவாகனம், ரிஷப வாகனம், சிம்ம வாகனம், குதிரை வாகனம், முத்துபல்லக்கு போன்றவற்றில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. நேற்று, மாசித்திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி, உள்ளூர் விடுமுறை அறிவிக்கபட்டிருந்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும், அக்கின குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். கவிநாடு கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் கோலாட்டம் நடனம் ஆடினார். பல்÷று இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், எம்.எல்.ஏ., கார்த்திக்தொண்டைமான், நகராட்சித் தலைவர் ராசேகரன், முன்னாள் அறங்காவல் குழு தலைவர்கள் வெங்கடாசலம், வைரவன், திருவப்பூர் முத்துமாரியம்மன் அறக்கட்டளை நிர்வாகி சேகரன், நகராட்சி உறுப்பினர்கள் மலர்விழி முத்து, சதீஷ்குமார், இந்து சமய வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயப்பிரியா, செயல் அலுவலர் கருணாகரன், ஆய்வர் ராமகிருஷ்ணன், மேற்பார்வையாளர் சேதுராமன், விழாக்குழுவினர், திருவப்பூர், கவிநாடு கிராமத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்தனர்.