புண்ணிய பூமி ராமேஸ்வரம்!
ராமேஸ்வர தீர்த்த யாத்திரை 36 நாட்கள் கொண்டது. ஆனால் இன்று அது வேக யுகத்தில் மாறி விட்டது. தீர்த்த யாத்திரையில் ஒவ்வொரு கோவிலும் ஒரு முக்கிய தெய்வமாக கருதப்படுகிறது. தேவிபட்டினத்தில் உள்ள கோவில் சூரியனாக கருதப்படுகிறது. பாம்பன் பைரவராக கருதப்படுகிறது. மண்ணாலான லிங்கம் இருப்பது ராமேஸ்வரம். இது பார்வதியாக போற்றப்படுகிறது. திரும்புல்லாணி மகாவிஷ்ணுவாக வணங்கப்படுகிறது. உத்தரகோசமங்கை நடராஜ தத்துவம் கொண்ட சிவஸ்வரூபமாக வணங்கப்படுகிறது. இதுதான் ராமேஸ்வரத்தின் புனித நிலவரைவியல்.
ராமநாதசுவாமி கோவில்: ராமேஸ்வரத்தின் அனைத்து சிறப்புகளின் மணிமகுடமாகும். காசியை கங்கையை தமிழ்நாட்டுடன் இணைக்கும் பாலமாக இந்த தலம் உள்ளது. இந்தியாவை மட்டும் அல்லாமல் இலங்கையையும் இந்தியாவுடன் பண்பாட்டு ரீதியாக இணைக்கும் பாலமாக ராமேஸ்வரம் கோவில் உள்ளது. டாக்டர் பெர்கூஸன் என்ற இந்தியவியலாளர் தென்னிந்திய கோவில்களின் அமைப்புகளிலும் சிற்பக்கலையிலும் ஈடுபாடு கொண்டவர். அவர் ராமேஸ்வரம் கோவிலின் பெருமையை பின்வருமாறு கூறுகிறார். திராவிட கட்டடக் கலைகளின் நிறைகுறைகளை காட்டும் ஒரு சிற்பக்கலைக்கு உதாரணம் வேண்டுமென்று ஒருவர் தேடினால் அவர் வந்து சேரும் இடம் ராமேஸ்வரமாகத் தான் இருக்கும். வேறெங்கும் கோவில் கட்டும் திறமைகள் இத்தனை பொறுமையாக வெளிப்படவில்லை என்பது அவரது கூற்று. மிகவும் பழமையான கோவிலின் உள்கட்டு பிரகாரம் 144 தெய்வ திருச்சிலைகள் கொண்டதாக உள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் 17 தெய்வ திருவடிவங்கள் பூஜைகளை ஏற்பதற்காக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கோவிலில் 381 தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினசரி பூஜை செய்விக்கப்படுகிறது. ராமேஸ்வரம் அப்போது திரு இராமேச்சுரம் என்று அழைக்கப்பட்டது. திருநாவுக்கரசர் தன் திருராமேச்சுரத்து பதிகத்தில் இது குறித்து குறிப்பிட்டுள்ளார். இதை சம்பந்தர் தேவாரமும் கூறுகிறது. சமய இலக்கியங்களில் முக்கியத்துவம் பெற்று வளர்ந்த ராமேஸ்வரம் சேர சோழ பாண்டிய ஈழமன்னர்களால் திருப்பணி பெறப்பட்டது. பத்தாம் நூற்றாண்டில் சோழ சாம்ராஜ்ஜிய எழுச்சியின் விளைவாக பாண்டிய பகுதிகள் சோழர் ஆதிக்கத்தில் வந்தன. அப்போது பராந்தக சோழன் இந்த கோவிலில் துலாபாரம் நடத்தினான். தன் எடைக்கு சமமான பொன்னை கோவில் திருப்பணிக்கு அளித்தான். இது வேளஞ்சேரி செப்பேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய வரலாறுகளால் சேது சமுத்திர ராமேஸ்வர தீர்த்த யாத்திரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் தன்மையை பெற்றது. - சுப்பிரமணியபிள்ளை. பேராசிரியர்(ஓய்வு)