சோமேஸ்வர ஸ்வாமிகோவிலில் பாலாலயம்!
கும்பகோணம்:கும்பகோணம் மகாமக திருவிழாவை முன்னிட்டு, சோமேஸ்வர ஸ்வாமி கோவில், 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது. இதற்காக, பாலாலயம் செய்து திருப்பணி தொடங்கியது."குடந்தை காரோணம் என போற்றப்படும் கும்பகோணம் சோமேஸ்வர ஸ்வாமி கோவிலில் மூலவராக சோமேசுவரரும், சோமசுந்தரி என்ற தேனார் மொழியாள் அம்பாளும் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். மேலும், இக்கோவிலில் மாலீஸ்வரர், கல்யாண சுந்தரவிநாயகர், வள்ளி, தெய்வானை உடனாய ஆறுமுகர், கஜலட்சுமி, நடராஜர் ஆகிய ஸ்வாமிகள் சன்னதியும் உள்ளது.
இத்தலத்து அம்பிகை, இறைவன் திருமேனியை ஆரோகணித்ததால், குடந்தைக் காரோணம் எனப் பெயர் பெற்றது.இக்கோவிலில் கடந்த, 2003ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது, மகாமக திருவிழாவை முன்னிட்டு, 75 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது. இதற்காக, கோவிலில் பாலாலயம் செய்து, திருப்பணிகள் துவங்கியுள்ளது. திருப்பணியை, நகராட்சி தலைவர் ரத்னாசேகர் தொடங்கி வைத்தார். கோவில் நிர்வாக அதிகாரி நிர்மலாதேவி மற்றும் முக்கிய பிரமுகர்கள், கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.