திருவானைக்காவல் கோவிலில் மார்ச் 21ம் தேதி தேரோட்டம்!
திருச்சி:திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவில் தேரோட்டம், வரும், 21ம் தேதி நடக்கிறது.பஞ்சபூத ஸ்தலங்களில், நீர் ஸ்தலமாக விளங்கும் திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் பங்குனி தேர் திருவிழா சிறப்பாக நடக்கும். இங்கு, பங்குனி தேர் திருவிழா கடந்த, 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
வரும், 16ம் தேதி, எட்டுத்திக்கும் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 21ம் தேதி, பங்குனி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை, 8 மணிக்கு வடம் பிடித்து தேர் இழுக்கப்படுகிறது.தேரோட்டத்தில், ஸ்வாமியும், அம்பாளும் தனித்தனி தேரில் எழுந்தருளி, நான்காம் பிரகாரத்தில் வலம் வருகின்றனர். 10ம் நாள் காலை நடராஜர் தரிசனம், நண்பகல் பிரம்ம தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி, இரவு ஏக சிம்மாசனத்தில் வெள்ளை சாத்துப்படி புறப்பாடு நடக்கிறது.இதை தொடர்ந்து, மூன்று நாட்கள் சொக்கர் உற்சவமும், மூன்று நாட்கள் மவுனோத்சவமும், மூன்று நாட்கள் சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடக்கிறது. ஏப்ரல், 4ம் தேதி பஞ்ச பிரகாரம் நடக்கிறது. அன்று ஸ்வாமி, அம்பாள் வேடத்திலும், அம்பாள், ஸ்வாமி வேடத்திலும் எழுந்தருள்கின்றனர். ஏப்ரல், 5ம் தேதி விடையாற்றி நிகழ்ச்சி நடக்கிறது. 6ம் தேதி மாலை, மண்டலாபிஷேகத்துடன் விழா நிறைவுறுகிறது.