உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீர்த்தகிரீஸ்வரர்மாசிமக தேரோட்டம்!

தீர்த்தகிரீஸ்வரர்மாசிமக தேரோட்டம்!

அரூர்:தீர்த்தமலை, தீர்த்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டம் நேற்று விமர்சையாக நடந்தது.அரூர் அடுத்த, தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மாசிமக தேரோட்ட விழா கடந்த, 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 5ம் தேதி ஸ்வாமி திருவீதி உலாவும், 6ம் தேதி குத்து விளக்கு பூஜையும், 7ம் தேதி சிறப்பு அபிஷேகமும், 8ம் தேதி ஸ்வாமி திருக்கல்யாணமும், 9ம் தேதி ரிஷப வாகன திருவீதி உலாவும் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று விமர்சையாக நடந்தது. விழாவில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் பொரி, கடலை, முத்து கொட்டை மற்றும் நவதானியங்களை விநாயகர், தீர்த்தகிரீஸ்வரர், வடிவாம்பிகை தேரின் மீது வீசி வணங்கினர். மதியம், 2.20 மணிக்கு, விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து கோவிலை சுற்றிவந்து நிலை நிறுத்தினர்.

பின்னர், தீர்த்தகிரீஸ்வரர் தேரை பக்தர்கள் வடிம் பிடித்து இழுத்து கோவிலை சுற்றி வந்து நிலை நிறுத்தினர். இறுதியாக வடிவாம்பிகை தேரையும் இழுத்தனர். பக்தர்களுக்கு அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, பெங்களூரு, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அரூர் டி.எஸ்.பி., தட்சிணாமூர்த்தி தலைமையில், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். விழாவையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இதில், மூன்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் பழுதடைந்து பாதியிலேயே நின்றதால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !