பழங்கால புத்தர் சிலை கண்டெடுப்பு!
தஞ்சாவூர்: ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலை, தஞ்சாவூர் அருகே கண்டு எடுக்கப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே உள்ள அருந்தபுரம் கிராமத்தில், சிவன் கோவிலை சுத்தம் செய்தபோது, பழமையான புத்தரின் கற்சிலை ஒன்று, தலை இல்லாமல் கண்டு எடுக்கப்பட்டது. இந்த சிலையை ஆய்வு செய்த, ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் கூறியதாவது: இது, பத்மாசன கோணத்தில், தியான நிலையில் அமர்ந்துள்ள புத்தர் சிலை; ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தது. இதே கோவிலில், மூலவர் அமைந்துள்ள கருவறையின் தென்புற சுவரின் வரைகோட்டு வடிவில், ஒரு நதி, ஆமை, மீன்களுடன் காட்டப்பட்டு உள்ளது. அதன்கீழ், ஒரு பெண் அமர்ந்த கோணத்தில் சிவலிங்கத்தை வணங்குவதாக, புடைப்பு சிற்பமாக காணப்படுகின்றன. இவ்வாறு அவர், தெரிவித்தார். கண்டுடெடுக்கப்பட்ட புத்தர் சிலை, தற்போது, கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.