மாஷபுரீஸ்வரர் கோவில் தேர் இன்று வெள்ளோட்டம்
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே 60 ஆண்டுகளுக்கு பிறகு லோகாம்பிகை வலமுறை மாஷபுரீஸ்வரர் கோவில் புதிய தேரோட்ட வெள்ளோட்டம் இன்று நடக்கிறது. உளுந்தூர்பேட்டை பேரூராட்சி உளுந்தாண்டார்கோவில் பகுதியில் லோகாம்பிகை வலமுறை மாஷபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் பழுதானதால் தேரோட்டம் நின்றுபோனது. மக்களின் கோரிக்கையை குமரகுரு எம்.எல்.ஏ., அப்போதைய முதல்வர் ஜெ.,விடம் எடுத்துரைத்தார். அறநிலையத்துறை மூலம் ரூ. 10 லட்சமும், குமரகுரு எம்.எல்.ஏ., தனது சொந்த பணம் ரூ. ஒரு லட்சம், அப்பகுதி வழக்கறிஞர் தண்டபாணி ரூ. 50 ஆயிரம் மற்றும் மக்கள் ரூ.18.50 லட்சம் பங்களிப்புடன் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்த ஸ்தபதி சின்னராசு தலைமையிலான குழுவினர் புதிய திருத்தேரினை வடிவமைத்தனர். 17 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட இத்தேர் இன்று காலை 9 மணிக்கு வெள்ளோட்டம் விடப்படுகிறது.