எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
ஆர்.கே.பேட்டை: பொதட்டூர்பேட்டை எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று காலை நடந்தது. பொதட்டூர்பேட்டை, இ.எஸ்.டி.நகர் மேற்கு பகுதியில், எல்லைஅம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. செங்கழனி குலத்தாரின் குலதெய்வமான இந்த கோவில் கட்டுமான பணி, ஓராண்டு காலமாக நடந்து வந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்கான யாகசாலை பூஜை, கடந்த திங்கட்கிழமை மாலை, கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை, 9:00 மணியளவில், யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள், கோவில் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. 10:00 மணியளவில், கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில், பொதட்டூர்பேட்டை மற்றும் சுற்றுப்பகுதி யைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ரத்தினகிரி பால முருகனடிமை சுவாமிகள், இவ்விழாவில் கலந்து கொண்டார். மாலை, 6:00 மணியளவில், பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் மங்கள வாத்தியங்கள் முழங்க, அம்மன் வீதியுலா எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், அம்மையார்குப்பம் வள்ளலார் நகரில் உள்ள குப்பாத்தம்மன் கோவில் கும்பா பிஷேகமும், நேற்று காலை, 11:00 மணிக்கு நடந்தது.