விருத்தகிரீஸ்வரர் கோவிலில் காய்கறி அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் அருள்பாலிப்பு!
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவ விடையாற்றி உற்சவத்தில் பழங்கள், காய்கறிகளால் அலங்கரித்து, பஞ்சமூர்த்திகள் அருள்பாலித்தனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவம் கடந்த மாதம் 23ம் தேதி துவங்கி, கடந்த 3ம் தேதி தேரோட்டம், 4ம் தேதி மாசி மகம், தீர்த்தவாரி, 5ம் தேதி தெப்பல் உற்சவத்துடன் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, 10 நாள் விடையாற்றி உற்சவம் நடக்கிறது. 6ம் நாள் உற்சவத்தையொட்டி, விநாயகர், முருகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு நுõற்றுக்கால் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, வாழை உள்ளிட்ட பழங்கள், கத்தரி, முள்ளங்கி, புடலை, கேரட், பச்சை மிளகாய், அவரை, வெண்டை, சுரைக்காய் உள்ளிட்ட காய்கறி வகைகளால் பஞ்சமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.